நமக்குத் தண்ணீர் எப்படிக் கிடைக்கிறது

வி.அருண்

புதர்களைப் பற்றி நேரடியான அவதானிப்பு மூலம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பின் அடுத்த பாடத்திட்டமாக நீர்நிலைகளைப் பற்றியும் நீர்நிலைகளுக்கு நீர் எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றியும் படிப்பது என்று திருவண்ணா மலை மருதம் பள்ளியில் முடிவெடுத்தோம்.

இதற்கு எங்களின் சக ஆசிரியர் மாசிலாமணி அண்ணாதான் வழிகாட்டி. எங்கள் அமைப்பு கடந்த இருபது ஆண்டுகளாக திருவண்ணாமலை மலையில் மரம் நடுதல், காட்டுத் தீயை அணைத்தல், தீத்தடுப்பு பாதை உருவாக்குதல் போன்ற வேலைகளைச் செய்துவருகிறது. மலையில் செய்யும் எல்லாச் செயல்பாடுகளுக்கும் தலைவர் மாசிலாமணி அண்ணாதான். இந்தப் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு இயற்கைத் தலத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நுணுக்கமாகத் தெரிந்துவைத்துள்ளார். ஒரு சுனை எங்கிருந்து உருவாகிறது, எந்த அருவி எந்த பாதையில் பாய்ந்து எந்த நீர்நிலையைச் சென்றடைகிறது என்று ஆழமாகப் புரிந்துவைத்துள்ளவர்.

இவ்வளவு விஷயம் தெரிந்தவர் எங்கள் குழுவை ஆசிரியராக வழிநடத்திச் செல்லப்போகிறார் என்பதை நினைத்து எங்களுக்குப் பூரிப்பாக இருந்தது. ஒவ்வொரு புதன்கிழமையும் இரண்டு வகுப்பு மாணவர்களும் அவர்களுடைய ஆசிரியர் களும் இந்த ஆராய்ச்சியில் ஆழ்ந்தோம். இருபது வாரமாக இந்த நிலப்பகுதியை அலசினோம்.

கற்றல் முறை

இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் எங்கிருந்தாவது ஒரு அருவியைப் பின்தொடர்ந்து நடக்கத் தொடங்குவோம். சில அருவிகளுக்கு அவற்றின் படுகையிலேயே நடந்துசெல்ல முடிந்தது. மலையை நோக்கி நடந்து, பின்னர் மலை மீது ஏறி எவ்வளவு தொலைவு போக முடியுமோ அவ்வளவு தொலைவுக்கு ஏறி அவதானிப்போம். பல அருவிகள் முள் புதர்கள் நிறைந்தவையாக இருக்கும். அப்பொழுது அருவிக்கு அருகில் வேறு பாதை கண்டுபிடித்து, அதன் வழியாகச் செல்வோம். பல பாதைகளில் ஊர்ந்துகூடச் செல்ல வேண்டியிருக்கும்.

மாசிலாமணி அண்ணா இல்லாமல் இது சாத்தியப்பட்டிருக்காது. காட்டில் அவருடன் இருப்பதே தனி அனுபவம்தான். அறுபது வயதை நெருங்கிவிட்ட அவர் நகரக்கூடிய விதம், குறைந்த அளவு முயற்சியுடன் ஒரு காட்டு விலங்கைப் போல் எளிமையாகவும், அழகாகவும் இருக்கும்.

மலை மேல் சென்றபின் நீரோடையைத் தொடர்ந்து, அது சென்று கலக்கும் ஏரி வரை பின்தொடர்ந்து செல்வோம். ஏரிகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. அந்த இணைப்புகளையும் அவதானித்தோம். நாங்கள் நடந்து சென்ற பாதைகளை ‘கூகுள் ட்ராக்ஸ்’மூலம் பதிவுசெய்து, பின்னர் அவற்றை வரைபடம் மூலம் பார்த்துப் புதிய புரிதல்களைப் பெற்றோம்.

நாங்கள் இந்த ஆய்வுத் திட்டத்தை ஆரம்பித்தபோது மழைக்காலம் தொடங்கியிருக்கவில்லை. எல்லா ஓடைகளும் காய்ந்த நிலையிலிருந்தன. இரண்டாம் சுற்றில் அதே ஓடைகளில் நீர் பாய்ந்த நிலையில் கண்டுகளித்தோம்.

நாங்கள் அவதானித்த சுனைகள் எல்லாம் ஒரே பகுதியிலிருந்தாலும் ஒவ்வொரு ஓடைக் கரையிலும் இருந்த மரங்களும் கொடிகளும் நிறைய வேறுபட்டிருந்தன. அவற்றை நாங்கள் பதிவுசெய்தோம். இந்தப் பாடத்திட்டத்தில் கிடைத்த கற்றலை வார்த்தைகளில் மட்டும் எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. எல்லாருக்கும் இது ஆழ்ந்த கற்றல் அனுபவமாக அமைந்தது என்பதைப் பகிர்ந்துகொண்டார்கள். ஒரு கருத்தை அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்வதன் அருமையை மீண்டும் உணர்ந்தோம்.

ஈடு செய்ய முடியாத கற்றல்

திருவண்ணாமலை பகுதியில் பெரும்பாலும் முட்புதர் காடுகள் காணப்படும். ஆனால், ஓடைகளை ஒட்டி பசுமைமாறா மரங்களை அவதானிக்க முடிந்தது. அது மட்டுமல்லாமல் ஓடைப்பகுதிகளில் வெப்பநிலை குறைந்திருந்தது. இதை ‘நுண் காலநிலை’என்று கூறுவார்கள். இதை மாணவர்கள் அனுபவப்பூர்வமாகக் கற்றுக்கொண்டனர்.

இந்த ஓடைகளில் விசிறிவால் ஈப்பிடிப்பான் பறவைகளைக் காண முடிந்தது. எங்கள் பகுதியில் அரிதான பறவை இது. இப்பறவைகளின் இயற்கை யான வாழ்விடம் ஓடை போன்ற நீர் இருக்கும் இடங்களே. இப்பறவையினத்தை அங்கு கண்ட பிறகே இந்தத் தகவலை அறிந்துகொண்டோம். ஒரு மலை நீர்ப்பிடிப்புப் பகுதியாக எவ்வாறு செயல்படுகிறது,மழை நீர் எவ்வாறு மண்ணில் ஊறி, பின் வெளியேறி வடிந்து, முதலில் சிறு நீரோட்டங்களாகவும் பின்னர் அருவிகளாகவும் மாறுகின்றன என்பதை நேரடியாகக் கண்டறிந்தோம். இது போன்ற விஷயங்களை எத்தனை புத்தகங்களில் படித்தாலும், அனுபவத்தில் புரிந்துகொள்வதுபோல் உணர்ந்துகொ்ளள முடியாது. இது போன்ற கற்றலில் நன்றாகப் படிப்பவர், நன்றாகப் படிக்காதவர் என்கிற வேறுபாடும் இல்லை. எல்லோரும் சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கற்றுக்கொண்டனர்.

இந்தப் பின்னணியில் அருகில் இருக்கும் நிலப்பரப்புகளைக் கற்றலுக்காக வெவ்வேறு விதங்களில் பயன்படுத்துவதற்கான ஆவல் வளர்ந்துகொண்டே போகிறது. அடுத்த பதிவில் மேற்கு மலைத் தொடரின் மாபெரும் மரங்களை அவதானித்துக் கற்றுக்கொண்டதைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published.