புதர்கள் கற்றுத்தந்த புதிய பாடம்!

வி. அருண்

சுற்றுச்சூழல் ஆய்வு, உயிரியல் பாடங்கள் குறித்த கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் திறந்தவெளியைப் பயன்படுத்துவது மிகச் சிறப்பானது என்பதைப் பலமுறை உணர்ந்துள்ளேன். திருவண்ணாமலை மருதம் பள்ளியில் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பல பாடங்களை வெளிப்புறச் சூழலிலே கற்றோம். அந்த அனுபவத்தை இங்கே பகிர விரும்புகிறேன்.

நாங்கள் பல வருடங்களாக இயற்கையைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தாலும், இயற்கையின் எழிலை அனுபவித்து இருந்தாலும் எங்கள் பகுதியில் இருக்கும் புதர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமானதாகவே இருந்தது. ஆனால், அதிக நேரம் வெளிப்புறத்தில் கழிக்கத் தொடங்கிவிட்டதால் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்தோம்.

புதர்களை அடையாளம் காண்பது ஏன் கடினம் என்றால் கிட்டத்தட்ட எல்லாப் புதர்களும் இலைகள் சிறியதாகவும், முட்களோடும் இருக்கும். பூக்கள் சிறியதாகவும் பெரும்பாலும் வெள்ளையாகவும் இருக்கும். காய்களும் சிறியதாகவும் பிஞ்சாக இருக்கும்போது பச்சையாகவும் இருக்கும். இதனால் அவற்றை அடையாளம் காண்பதற்குத் துல்லியமாகக் கவனித்துச் சிறு சிறு வித்தியாசங்களை வேறுபடுத்தி அறிய வேண்டும். இதற்குப் பொறுமையும் நிதானமும் வேண்டும்.

சவாலுக்குத் தயாராதல்

இந்தச் சவாலுக்கு மாணவர்கள் தயாராக இருந்தார் களா என்று முடிவுசெய்த பின் ஒரு வட்டமாக அமர்ந்து, இப்பாடத்திட்டம் முழுமை அடைய என்னென்ன செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவாதித்தோம். பின்னர் வெவ்வேறு புதர்களை அவதானித்தபடி நடந்து சென்றோம். ஒவ்வொரு நாளும் இதைச் செய்தோம். மீண்டும் மீண்டும் கவனிக்கும்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் வித்தியாசங்களை உணர ஆரம்பித்தோம்.

இலை வடிவம், நிறம், மேற்பரப்பு, கீழ்பரப்பில் வெவ்வேறு நிறம், அமைப்பு, நரம்பு, இலை விளிம்பு அமைப்பு, இலையில் உள்ள முடி, இலையின் அமைப்பு, இலையின் அளவு என்று பல வித்தியாசங்களைக் கவனித்தோம்.

மலர்களில் – நிறங்கள், வடிவங்கள், இதழ்களின் எண்ணிக்கை, அமைப்பு, அளவு.

பழங்களில் – நிறம், அளவு, எண்ணிக்கை, உண்ணக் கூடியவையா.

முட்கள் – இருக்கின்றனவா, அளவு, நிறம், அமைப்பு.

புதர் வெயிலில் இருந்ததா அல்லது நிழலிலா என்று குறிப்பு எடுத்தோம். என்ன உயரம், அடர்த்தியில் வளர்ந்திருந்தது என்று குறித்துக்கொண்டோம்.

மாணவர்கள் துல்லியமான விவரங்களைக் கவனிக்கத் தொடங்கினர். உதாரணமாக, பச்சை நிறத்திலேயே அடர்த்தியாகவோ வெளிறியோ எத்தனை வகைகளில் இலைகள்/புதர்கள் இருக்கின்றன என்பதை கவனித்தல். அல்லது ஒவ்வொரு இலையின் அமைப்பும் எப்படி வேறுபடுகிறது.

மாணவர்கள் தங்களுடைய அவதானிப்புகளை வெளிப்படுத்தச் சொல்லி வெவ்வேறு புதர்களைக் குழுவாகக் கவனித்தோம். வெவ்வேறு மாணவர்கள் வெவ்வேறு அம்சங்களைக் கவனித்தார்கள்.

இலை வடிவங்கள்

l எளிய, கூட்டு இலைகளை வேறுபடுத்தி அறிவது.

l கூட்டு இலைகளின் வெவ்வேறு அமைப்பு களைக் கவனிப்பது.

l மாணவர்கள் தலா ஒரு புதரைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்து அதைக் கவனித்து, முக்கிய அம்சங்களை வரையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

l கவனிக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பதிவுசெய்ய ஒரு அட்டவணையை உருவாக்கினோம்.

விவாதப் புள்ளி

மனிதர்களைப் பார்த்த மாத்திரத்தில் அடையாளம் காண்பதுபோல் மரங்களையும் புதர்களையும் அடையாளம் காண முடியுமா என்று அலசினோம்.

மரங்களுடன் வேலை செய்பவர்கள் எவ்வாறு வெவ்வேறு இனங்களை உடனடியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்? அதே வகையில், மாணவர்களுக்கு ஒரு சவால் – நீங்கள் தேர்ந்தெடுத்த இனத்தை அப்படி அடையாளம் காண முடியுமா? அதன் வயதின் பல்வேறு நிலைகளில்? ஒரு சிறிய செடியாக? பூக்கள், பழங்களுடன் அல்லது இல்லாமல்?

இந்த கட்டத்தைக் கடந்த பின் மற்ற உயிரினங்களுடனான புதர்களின் உறவுகளைக் கவனிக்க ஆரம்பித்தோம். வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், வண்டுகள், பறவைகள் தாவரத்துக்கு வருகின்றனவா? அவற்றை முகர்ந்து பார்க்கின்றனவா என்று கவனிக்க ஆரம்பித்தோம். அவற்றில் சிலந்திகள் உள்ளனவா? கம்பளிப்பூச்சிகள் உள்ளனவா என்பதையும் கவனித்தோம். வேறு என்னென்ன சுற்றுச்சூழல் தொடர்புகளைக் கவனிக்க முடியும் என்று ஆராய்ந்தோம்.

இதைத் தொடர்ச்சியாக வருடம் முழுக்கச் செய்தபொழுது பல புரிதல்கள் மலர ஆரம்பித்தன. இயற்கையின் பல தொடர்புகள் நமது புலன்களை வந்தடைந்தன. மனத்தளவில் மட்டும் கவனிக்காமல் நம் முழு உடலையும் கவனிக்கும் செயல்பாட்டுக்கு மாற்றும்பொழுது நமக்குள் மறைந்திருக்கும் இயற்கைத் தொடர்புகள் புத்துணர்வு பெறுவதை உணர்ந்தோம். அவதானிப்பு வேறு வகையிலான உச்சத்தைத் தொட்டது.

தொடரும் கவனிப்பு

ஒவ்வொரு மாணவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதர்ச் செடியை ஒரு சக மாணவர், ஒரு இளம் மாணவர், ஒரு ஆசிரியர் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி வைத்ததுடன் எங்கள் திட்டத்தை நிறைவுசெய்தோம்.

இவ்வாறு நாங்கள் அறிந்துகொண்ட புதிய புதர்கள் – பூலாந்தி, காரை, கொரங்கு வெற்றிலை, வெடிபுலா, செம்புளிச்சை, பல்லுகுச்சி கொடி, தோட்டி வீரா, வீரா, விராலி, நானா பழம் போன்றவை.

திட்டம் முடிந்தாலும் பாடத்திட்டம் முடிவு பெற வில்லை. இப்போது மாணவர்களுடன் எங்கே சென்றாலும் புதர்களைக் கவனிக்கின்றனர். கேள்வி களை எழுப்புகின்றனர். ஒவ்வொருவருக்கும் ஏன் ஆசிரியர்களுக்கும் புதிய புதர் குறித்துச் சவால் விடுக்கின்றனர். இவ்வாறு கற்றல் தொடர்ந்து மகிழ்வடைகிறது. அடுத்த சவாலாக மலையில் தோன்றும் அருவிகள், ஊற்றுகள் எந்தெந்த நீர்நிலை களைச் சென்றடைகின்றன என்பதை ஆராயலாம் என்று திட்டமிட்டோம். அதைப் பற்றித் தனியாகப் பகிர்கிறேன். ஆனால், அருவிகள் பற்றி ஆராய்ந்தபோதும் புதர்கள், செடிகள் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்துகொண்டிருந்தது மிகுந்த பூரிப்பை அளித்தது.

கட்டுரையாளர், ஆசிரியர் சூழலியல் செயற்பாட்டாளர்

தொடர்புக்கு: arun.turtle@gmail.com

Leave a Reply

Your email address will not be published.