இயற்கை தந்த தனித்துவ பரிசு

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/08/large/755338.jpg

மனிதர்களான நாம் ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்வதில் அனுபவம் பெற்றிருப்பதைப் போலவே, அழிவுப் பூர்வமான வேலைகள் செய்வதிலும் பல நூற்றாண்டு கால அனுபவத்தைப் பெற்றுள் ளோம். இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்றால், ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்வது கடினம் என்பதுதான். காடுகளை அழித்ததால் ஆறுகள் வற்றி விட்டன, காலநிலை மாற்றத்தால் பனி உருகுகிறது, வாழிடம் அழிந்ததால் உயிரினங்கள் அழிந்துவிட்டன என்பது போன்ற செய்திகளைக் கேட்டுக் கேட்டு விரக்தி அதிகரிக்கிறது.

ஆனால், இயற்கையின் ஓர் அங்கமான பறவைகளையும், அவற்றின் வாழிடங்களையும் கண்டுகளிக்கும்போதும், அவற்றுடன் உறவாடத் தொடங்கும்போதுதான் பூவுலகில் எஞ்சியிருப்பதையாவது காப்பாற்ற அவசரமாகச் செயல்படவேண்டும் என்கிற புரிதல் வரும்.

சாலிம் அலி காட்டிய வழி

இயற்கையின் பல்வேறு அம்சங்களிலும் ஒருவருக்கு ஆர்வம் இருந்தாலும், நம் ஈர்ப்பு பெரும் பாலும் தொடங்குவது பறவைகளிட மிருந்துதான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. முதலில் பல பறவைகளை அடையாளம் காண முடியவில்லை. கண்ணில் பட்ட பறவைகளைப்பற்றியெல்லாம் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். பின்னர் சாலிம் அலியின் ‘The Book of Indian Birds’ களக் கையேட்டை வாங்கினேன். ஒவ்வொரு நாளும் ஓய்வு நேரத்தில் அந்தப் புத்தகத்திலேயே மூழ்கிக் கிடப்பேன்.

அப்பொழுதுதான் இயற்கையை நேசித்ததற்கான முதல் பரிசு கிடைத்தது. ஒவ்வொரு இரவும் கனவில் மணிக்கணக்கில் பறவைகள் வந்து செல்லும். காலை எழுந்தவுடன் புத்தகத்தை எடுத்துப் புரட்டுவேன். கனவில் பார்த்த ஒரு பறவைகூடப் புத்தகத்தில் இருக்காது. அந்தக் கனவுகள் நிற்கவே கூடாது என்று நினைத்துக்கொள்வேன். ஆனால், சில மாதங்களுக்குப் பின், அதுபோன்ற கனவுகள் நின்றுபோயின. ஆனாலும் அந்த களக் கையேட்டைப் பார்த்துப்பார்த்து கிட்டத்தட்ட எல்லாப் பறவைகளின் பெயரையும் அறிந்துகொண்டிருந்தேன். நேரில் பார்க்கும்பொழுது உடனடியாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

நுணுக்கமான அவதானிப்பு

நானாக முதலில் அடையாளம் கண்டுகொண்ட பறவை மாங்குயில் (Indian Golden Oriole). அந்த மகிழ்ச்சியான தருணத்தை மறக்கவே முடியாது. ஒருமுறை வீட்டிற்கு அருகிலிருந்த நீர்நிலையிலிருந்த பறவைகளைக் கண்டு மகிழ்ந்துகொண்டிருந்தோம், கையில் சாலிம் அலியின் புத்தகம் இருந்தது. வெண்மார்புக் கானாங்கோழி (White-Breasted Water Hen) ஒன்று எதிரே நடந்து வந்துகொண்டிருந்தது. அந்தப் பறவையைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே, கையேட்டில் அப்பறவையைப் பற்றி சாலிம் அலி எழுதியிருந்த குறிப்புகளையும் படித்தோம்.

அது எவ்வாறு நடக்கும், வாலை எவ்வாறு மேலே உயர்த்திப் பின்னர் கீழே இறக்கும், கழுத்து எவ்வாறு நகரும் என்று அவர் விவரித்திருந்தார். அந்தக் குறிப்பிலிருந்தது போலவே எங்கள் எதிரே இருந்த பறவையும் செய்துகொண்டிருந்தது. எவ்வளவு நுணுக்கமாகக் குறிப்பெடுத்து எழுதி வைத்திருக்கிறார் இந்த மனிதர் என ஆச்சரியப்பட்டுக் கொண்டோம். இந்தியாவி லிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளுக்கு இப்படி நுணுக்கமாகக் குறிப்பெடுத்து அவர் பதிவுசெய்திருக்கிறார் என்பதை நினைக்கும்பொழுது மலைப்பாக இருக்கிறது.

https://static.hindutamil.in/hindu/uploads/common/2022/01/08/16416214962006.jpg

பல பறவை ஆர்வலர்களை நான் சந்தித்திருக்கிறேன், உறவாடி யிருக்கிறேன். ஆனால், எனது நண்பரும் திருவண்ணா மலை ‘தி பாரஸ்ட் வே’ அமைப்பின் சக உறுப் பினருமான சிவக்குமார் போல் ஒருவரைச் சந்தித்ததில்லை. கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் தன்னுடைய இருகண் நோக்கியுடனும் ஒளிப்படக் கருவியுட னும் அருகில் உள்ள ஏதாவது ஒரு இயற்கை வாழிடத்திற்கோ காட்டிற்கோ சென்றுவிடுவார்.

உடன் யாராவது வந்தாலும் வராவிட்டாலும் மணிக்கணக்காகக் காடுகளில் சுற்றுவார். இந்தப் பகுதியிலிருக்கும் ஒவ்வொரு குன்று, புதர்க்காடு, அருவி, குளம் எல்லாமே அவருக்குப் பரிச்சயம். எந்த வகையான பறவைகள் எங்கெங்கே இருக்கும் என்கிற விவரமும் அவருக்குத் தெரிந்திருக்கும். அவருடைய தேடல்கள், குறிப்புகள், பதிவுகள் மூலம் திருவண்ணாமலை பகுதியில் உள்ள 240 வகைப் பறவைகளை ‘Birds of Tiruvannamalai’ என்னும் நூலில் பதிவுசெய்துள்ளார். அவர் ஓர் அருமையான ஓவியர். அவர் வரைந்த பல பறவை ஓவியங்களை திருவண்ணாமலை அருணகிரி சிறுவர் பூங்காவில் காணலாம்.

நாங்களே நேரடி சாட்சி

பறவைகள் சூழலியல் சுட்டிக்காட்டிகள். குறிப்பிட்ட சில பறவை வகைகள் குறிப்பிட்ட வாழிடத்தில் மட்டுமே தென்படும். வாழிடம் சிதைந்து போனால், அங்கிருந்து அவை அகன்றுவிடும். வாழிடத்தை அறிவியல்பூர்வமாக மீளமைத்தால், அந்த வாழிடத்தில் இருந்த இயல் தாவரங்களை மட்டுமே வளர்த்தால், பறவைகள் மீண்டும் வரும். திருவண்ணாமலையில் இதை நாங்கள் கண்கூடா கப் பார்த்திருக்கிறோம்.

30 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணாமலை மலையில் பாறைகளும் புற்களும் மட்டுமே இருந்தன. வனத்துறை, அண்ணாமலை வனவளர்ச்சிக் குழு, தி பாரஸ்ட் வே அமைப்பு ஆகியவை இணைந்து பல லட்சம் மரக் கன்றுகளை நட்டன. அத்துடன் வாழிட மீளமைப்பு, காட்டுத்தீ அணைப்புப் பணிகளிலும் ஈடுபட்டன. இதனால், தற்போது இந்த இடம் உயிர்பெற்று, அடர் காடாக உருமாறியுள்ளது.

மனிதர்களைக் காட்டிலும் காடுகளை மீட்பதில் பறவைகள் பெரும் வல்லுநர்கள். அவை பழங்களைச் சாப்பிட்டு இடும் எச்சத்தில் முளைக்கும் மரக்கன்றுகள் காடு மீட்புப் பணியில் பெரும் பங்கு வகிக்கின்றன. காட்டின் வளம் அதிகரித்தால் அதிக பறவையினங்களுக்கு அது வாழிடமாக மாறும். பறவைகளின் எண்ணிக்கை கூடக் கூடக் காட்டின் வளமும் அதிகரிக்கும். காட்டின் வளம் கூடும்போது, அப்பகுதியின் நீர் சேகரிக்கும் தன்மையும் அதிகரிக்கும். இதற்கு நாங்களே நேரடி சாட்சியாக இருந்திருக்கிறோம்.

https://static.hindutamil.in/hindu/uploads/common/2022/01/08/16416216392006.jpg

முன்பு இந்த மலையில் மழை பெய்தால் காட்டாறாகச் சில மணி நேரத்துக்குத் தண்ணீர் ஓடும். பின்னர் வற்றிவிடும். இப்பொழுது ஒவ்வோர் ஆண்டும் மழை ஆரம்பித்துப் பல வாரங்களுக்குப் பின்னர்தான் நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாகிறது. அதேபோல் மழை பெய்து முடிந்தபின் பல வாரங்களுக்கு ஓடைகளில் நீர் ஓடியபடியே இருக்கின்றது. அருவிகளிலிருந்தும், நீரோடைகளிலிருந்தும் ஓடும் நீர் இம்மலையைச் சுற்றியுள்ள பல ஏரிகளை நிரப்பி, நிலத்தடி நீரை அதிகரிக்கிறது. இதனால், விவசாயிகள் பலனடை கின்றனர். காடு இருப்பதால் மழையும் கிடைக்கிறது.ஒரு நாள் நானும் சிவக்குமாரும் திருவண்ணாமலையின் அடிவாரத்தில் துடுப்புவால் கரிச்சானைக் (Greater racket-tailed drongo) கண்டோம். எங்கள் வியப்புக்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை. பொதுவாக இப்பறவை சற்றே அடர்ந்த காடுகளில் மட்டுமே தென்படும். இந்தப் பகுதிக்கு அது வந்திருக்கிறது என்றால், இங்கு நடந்த காட்டு மீளமைப்புப் பணியே காரணம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பல கரங்கள் இணைந்து செய்த வேலைக் குப் பலனாக இயற்கை கொடுத்த சான்றிதழ் அது.